IPL5 -RCB vs PW -பங்களூர் கண்ட எழுச்சி!
நேற்று சின்னசாமி அரங்கில் நடந்த ஆட்டத்தில், டாஸை வென்ற தாதா முதல்
பேட்டிங்கை தேர்வு செய்தார்! (கெய்லின் கொலவெறிக்கு தொடக்கத்திலேயே
வாய்ப்பு தர வேண்டாம் என்ற எண்ணமோ என்னவோ :)) ரைடர்-ராபின் உத்தப்பா
களமிறங்கினர். உத்தப்பா இம்முறை ’ஊத்தப்பா’ போல சொதப்பாமல், ராபின்(ஹுட்)
போல பரிமளித்தார்! இந்த நேரத்தில் உங்களுக்கு, மும்பையின் பல கோச்களில்
ஒருவரான ராபின் சிங் நினைவுக்கு வரவே கூடாது!
5 நாள் டெஸ்ட் ஆடும்
அணிகளுக்குக் கூட ஒன்றிரண்டு பயிற்சியாளர்கள் தான். ஆனால், இந்த 40 ஓவர்
ஐபிஎல் கூத்துக்கு, ஒவ்வொரு அணிக்கும், பேட்டிங் கோச், ஃபீல்டிங் கோச்,
போலிங் கோச், ரன்னிங் கோச், ஜாகிங் கோச் ... என்று நவஜீவன் எக்ஸ்பிரஸ் போல
இத்தனை கோச்களும் கம்ப்யூட்டர் அனலிஸ்ட், உடற்பயிற்சியாளர், உளவியல்
வல்லுனர் என்று உதிரிகளும் ஏன் என்று புரியவில்லை! ஆனால், அதே நேரம்,
சியர் லீடர்ஸ் அவசியம் என்பது மிகத்தெளிவாகப் புரிகிறது!
அதோடு,
ஐபிஎல்-இல் பணத்தை தண்ணி போல இறைத்து, கிரிக்கெட் பைத்தியம் பிடித்த நம்
மக்களுக்கு அப்பைத்தியம் துளியும் தெளியாமல் பார்த்துக் கொள்ளும் BCCI-இன்
கெட்டிக்காரத்தனத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! போட்ட துட்டை விட பல
மடங்கு அள்ளி விடுகிறார்கள் என்பது வேறு விஷயம். இது BCCI-இன் நிர்வாகிகள்
(ஓசியில்) ராஜ வாழ்க்கை வாழ்வதற்கு வழி வகுக்கிறது! இருட்டுச்சந்தில்
ஒளிந்து கொண்டிருக்கும் அனானி “அகங்காரம் பிடித்த பாலா, கிரிக்கெட்
ரசிகர்களை பைத்தியம் என்கிறார்” என்று கூக்குரல் இடுவதற்கு முன் ஒரு விஷயம்
:) நான் சொன்ன அந்த கிரிக்கெட் பைத்திய பட்டியலில் முதல் ஆள் அடியேன் தான்
என்று கூறி விடுகிறேன்!
சரி, ஆட்டத்துக்கு வருகிறேன்! 7 ஓவர்கள்
முடிவில், ரைடர் அவுட், புனே 63-1 என்று நல்லதொரு தொடக்கம். உத்தப்பா
ஆட்டம் இன்னும் சூடு பிடித்ததில், அவர் (69 of 45) அவுட்டானபோது, ஸ்கோர்
117-3 (13 ஓவர்களில்) என்று புனே வலுவான நிலையில் இருந்தது. ஸ்மித் அவ்வளவு
பிரகாசிக்கவில்லையெனினும், சாமுவேல்ஸ் ஒரு வாங்கு வாங்கியதில் (34 of 20),
புனே 182 ரன்கள் என்ற இலக்கை அடைந்தது.
கெய்ல், தில்ஷன்
களமிறங்கியும், பங்களூரின் தொடக்கம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை! 10
ஓவர்கள் முடிவில், பங்களுர் 63-2. கெய்ல் அதிரடி எதுவும் இல்லை! ஆனால்,
அவர் (35 of 30) ஆட்டமிழக்காமல் இருந்தது பங்களூருக்கு ஆறுதலான விஷயம்!
12வது ஓவரில் கோலி அவுட்!!! தேவையான ரன்ரேட் 13.4 என்று RCB ரசிகர்களின்
வயிற்றைக் கலக்கியது. Enough is enough என்று முடிவு செய்தது போல, கெய்ல்,
புனேவின் பெஸ்ட் பந்து வீச்சாளர் ராகுல் சர்மாவை தனது வதத்துக்கு இலக்காக
தேர்ந்தெடுத்து, 13வது ஓவரில் செய்த துவசம்சத்தில் 5 சிக்ஸர்கள், அந்த
ஓவரில் 31 ரன்கள்.
கெய்ல் பார்க்கத் தான் நெடுநெடுவென்று
புஜபராக்கிரம காட்டான் மாதிரி தெரிகிறார்! ஆனால், அந்த 5 சிக்ஸர்களும்
டைமிங்கோடு கூடிய அருமையான cricketing shots. கெய்ல் ஆடும்போது நேர்
அம்பயர் ஹெல்மட் அணிந்து கொள்ளுதல் நலம் என்று எனக்குத் தோன்றியது!
கெய்லின் இந்த விளாசல் காரணமாக, 6.3 என்ற ரன்ரேட் ஒரே ஓவரில், 8.3க்கு
சென்றது. RRR 10.85
நல்ல பந்து வீச்சு காரணமாக ஆட்டம் மீண்டும்
மெல்ல புனே பக்கம் சாயத் தொடங்கியது. 16வது நெஹ்ரா ஓவரில் ஒரு சிக்ஸர்
அடித்து, அடுத்த யார்க்கர் பந்தில் கெய்லின் அருமையான இன்னிங்க்ஸ் (81 of
48) முடிவுக்கு வந்தது. RRR 13.8
சௌரப் திவாரி தடவிக் கொண்டிருந்தார்! டிவிலியர்ஸ் களமிறங்கினார். டிவிலியர்ஸ் மாத்யூஸ் வீசிய 18வது ஓவரில் (reverse switch
hit) சிக்ஸர் அடித்தார்! பிரமாதமான Improvisation, Shot of the Day!
சுத்தமாக பேலன்ஸ் இல்லாத நிலையில், டிவிலியர்ஸ் அத்தனை பலத்தை
பிரயோகித்ததைப் பார்த்து பிரமிப்பாக இருந்தது!! திவாரிக்கும் ரோஷம் வந்து,
அவரும் ஒரு சிக்ஸ் :)
இதற்கு நடுவில், மைதானத்தில், புலியைப்
(சிவமணி) பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக, ஒரு ஜில்பா தலையர்
டிரம்ஸ் தட்டிக் கொண்டிருந்தது நல்ல நகைச்சுவை காட்சி ;-) கடைசி 2
ஓவர்களில் 28 ரன்கள் தேவை. டிண்டாவின் அந்த அற்புதமான ஓவர் ஒரு anti
climax. 7 ரன்கள் மட்டுமே கொடுத்து, கடைசி ஓவர் வீச இருந்த அனுபவமிக்க
நெஹ்ராவுக்கு 21 ரன்கள் மிச்சப்படுத்தினார். புனே வெற்றி என்று உறுதியாக
நம்பினேன்!
ஆனல், டிவிலியர்ஸ் வேறு திட்டம் வைத்திருந்தது எனக்குத்
தெரியாமல் போய் விட்டது :-) அவரது improvisation திறமையையும், Never say
Die attitude-ஐயும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். கடைசி 4 பந்துகளில் 16
தேவை என்ற நிலையில், 2 low full toss பந்துகளை சிக்ஸர்கள் அடித்து,
சமன்பாட்டை 2 பந்துகளில் 4 ரன்கள் என்று ஆக்கினார். 5வதில் ஒரு ரன்
மட்டுமே. டிவிலியர்ஸ் காரணமாக ஏற்கனவே ரோஷம் பொங்கிய நிலையில் இருந்த
திவாரி, கடைசிப்பந்தை பவுண்டரிக்கு வெளியே அனுப்பியதில், RCBக்கு ஒரு
famous WIN.
உடனே, வானம் பொத்துக் கொண்டு மழை கொட்டியது, வானத்து
இமையவர் வாழ்த்து போல அமைந்தது! அத்துடன், சென்னைக்கு எதிராக கோலி வீசிய
அந்த 28 ரன் ஓவர் மூலம் RCBக்கு பிடித்த சனி, இந்த அற்புதமான வெற்றி மூலம்
விலகியது என்றும் கூறலாம் ;-) இப்படியாக, ஆட்டத்தில் 38 ஓவர்கள் (கெய்ல் 5
சிக்ஸர்கள் அடித்த ஓவரையும், கடைசி ஓவரையும் தவிர்த்து) பின் தங்கியிருந்த
பங்களூர் அணி, ஒரு பிரமாதமான வெற்றியை பெற்றது!!!!!
எ.அ.பாலா